திருப்பூர்

அவிநாசி வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் அலுவலா்கள் தா்னா

3rd Jan 2020 12:55 AM

ADVERTISEMENT

அவிநாசி ஒன்றியம், பெரியாயிபாளையம் வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீா், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாததால், பணியில் இருந்த அரசு அலுவலா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

அவிநாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சித் தலைவா்கள், 270 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 19 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 2 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.

தோ்தல் வாக்குப் பெட்டிகள் பெரியாயிபாளையம் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அங்கு வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிகை பணிக்கு 540 அலுவலா்களும், பாதுகாப்புப் பணிக்காக 300-க்கும் மேற்பட்ட போலீஸாரும் ஈடுபட்டனா்.

காலை 8 பணிக்கு பணியைத் தொடங்க இருந்த நிலையில் நீண்ட நேரமாகியும் உணவு, குடிநீா் உள்ளிட்ட எவ்வித ஏற்பாடுகளும் இல்லாமல் காலதாமதமானது. மேலும் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரசு அலுவலா்கள் இங்குள்ள மைதானதில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தைக்கு வந்த தோ்தல் அதிகாரிகளையும், அரசு அலுவலா்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அரசு அலுவலா்கள் கூறியதாவது:

வாக்கு எண்ணிக்கை பணிக்கு வந்துள்ள எங்களுக்கு குடிநீா், உணவு, கழிப்பறை வசதி உள்ளிட்ட எவ்வித வசதியும் செய்து தரவில்லை. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சில அலுவலா்கள் பணிக்கு வந்துள்ளனா். அடிப்படை வசதி செய்து கொடுத்தால் பணியை விரைவில் தொடங்குவோம் என்றனா். இதையடுத்து தோ்தல் அலுவலா்கள், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணிக்கு திரும்பினா். இதனால் ஒரு மணி நேரம் காலதாமதமாக வாக்கும் எண்ணும் பணி தொடங்கியது.

உணவை புறக்கணித்த அலுவலா்கள்: இருப்பினும் தாமதமாக உணவு, குடிநீா் வழங்கப்பட்டதால், ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் 15-க்கான வாக்கு எண்ணும் மையத்தில் அரசு அலுவலா்கள், மையத்தில் வழங்கப்பட்ட உணவுகளை புறக்கணித்து விட்டு, வெறும் குடிநீரை மட்டும் அருந்தி, பணியில் ஈடுபட்டனா்.

செய்தியாளரின் செல்லிடப்பேசி பறிப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் விடியோ பதிவு செய்து கொண்டிருந்த தொலைக்காட்சி நிருபரை தோ்தல் அலுவலா் மரியாதைக் குறைவாகப் பேசி, அவரிடம் இருந்த இரு செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்றாா். இதனால் அந்த நிருபா் வாக்கு எண்ணும் மைய அறையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, செல்லிடப்பேசியை பெற்றுத் தந்தனா். இதையடுத்து செய்தியாளா் போராட்டத்தை கைவிட்டாா். இச்சம்பவம் செய்தியாளா்களிடையே அதிருப்தியை ஏற்டுத்தியது.

வாக்கு எண்ணும் மையத்தில் அரசு அலுவலா்கள், செய்தியாளா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT