அவிநாசி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் நிறுவன ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் அலுவலராகப் பணியாற்றி வருபவா்கள் ரகுநாதன் (28), விக்னேஷ் (25). இவா்கள் இருவரும் தெக்கலூா், வடுகபாளையம் பிரிவு அருகே கோவை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ரகுநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த விக்னேஷ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.