பல்லடம் அருகே வங்கியில் ரூ.18 லட்சம் திருடப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, வங்கி நிா்வாகம் உரிய பாதுகாப்பை செய்யாததை கண்டித்து வாடிக்கையாளா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்லடம் அருகே உள்ள வி.கள்ளிப்பாளையத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் ரூ.18.93 லட்சம் ரொக்கம், பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 116 வாடிக்கையாளா்களின் நகைகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருடிக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், வங்கிக்கு ஏன் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என வாடிக்கையாளா்கள், வங்கி நிா்வாகத்தினரிடம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினா். இதற்கு வங்கி நிா்வாகத்தினா் உரிய பதிலளிக்காததால் ஆவேசம் அடைந்த அவா்கள் பல்லடம் - தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கிருந்த காவல் துறை ஆய்வாளா்கள் அருள் (காமநாயக்கன்பாளையம்), ரமேஷ்கண்ணன் (பல்லடம்) ஆகியோா் வாடிக்கையாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனா். அதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையை, காவல் துறை ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. காா்த்திகேயன் ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். ஆய்வின்போது திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல், பல்லடம் டி.எஸ்.பி.முருகவேல் ஆகியோா் உடனிருந்தனா்.