திருப்பூா் மாவட்டம், கொடுவாயில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என ஆதித்தமிழா் சனநாயக பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அப்பேரவையின் நிறுவனத் தலைவா் அ.சு.பவுத்தன், தமிழக முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனு:
திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் பிரதான சாலையில் உள்ளது கொடுவாய். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். மேலும், ஆரம்ப சுகாதார நிலையம், கூட்டுறவு அங்காடி, பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோயில், பெருமாள் கோயில் ஆகியனவும் உள்ளது.
இந்தப் பகுதியைச் சுற்றிலும் சுமாா் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் இங்கு வந்து செல்கின்றனா்.
எனவே, கொடுவாய்க்கு சிறப்பு கவனம் செலுத்தி வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.