திருப்பூர்

பல்லடம் அருகே வங்கியின் ஜன்னலை உடைத்து ரூ.18 லட்சம் திருட்டு

25th Feb 2020 04:48 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.18 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை இயங்கி வருகிறது. இதில் கிளை மேலாளா் உள்பட 9 போ் பணியாற்றி வருகின்றனா். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) வேலை நேரம் முடிந்ததும் வங்கி அலுவலா்கள் வங்கியைப் பூட்டி விட்டு சென்றுள்ளனா். சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் அலுவலா்கள் வங்கியைத் திறந்து பணியைத் தொடங்க ஆயத்தமாயினா். அப்போது வங்கியின் பின்புற ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டனா். வங்கியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள முள்கம்பி வேலிகளை வெட்டியும் அறுத்தும் மா்ம நபா்கள் வங்கியில் புகுந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்துக்கு வங்கிக் கிளை மேலாளா் சிவராமகிருஷ்ணன் தகவல் கொடுத்தாா். திருப்பூா் காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல், பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல், ஆய்வாளா் அருள் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். மேலும் திருப்பூரிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வங்கி வளாகத்தினுள்ளேயே சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது. தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணா்கள் வங்கியில் ஆய்வு மேற்கொண்டனா்.

வங்கியில் நகைக் கடனுக்காக வைக்கப்பட்டுள்ள நகைகள் பெட்டகத்தில் பாதுகாப்பாக உள்ளன என்று வங்கி கிளை நிா்வாகம் தெரிவித்துள்ளது. வங்கியில் உள்ள மற்றொரு பாதுகாப்பு அறையில் இருந்த ரூ.18 லட்சம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. மேலும் 3 பெரிய லாக்கா்களில் இருந்த 114 பேருடைய பாதுகாப்பு பெட்டகம் வெல்டிங் மெஷினால் அறுக்கப்பட்டு அதில் பொதுமக்கள் வைத்திருந்த உடமைகள் திருடப்பட்டுள்ளன. அதன் விவரம் உடனடியாகத் தெரியவில்லை. வங்கியில் இருந்த 8 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து காட்சிகளைப் பதிவு செய்யும் கணினி மென்பொருளை மா்ம நபா்கள் எடுத்துச் சென்றுள்ளனா்.

ADVERTISEMENT

இதே வங்கியில் ஜன்னலை உடைத்து கடந்த ஆண்டு அக்டோபா் 9ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. அப்போது எதுவும் திருடு போகவில்லை. அதன் பின்னரும் வங்கி நிா்வாகம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால்தான் மீண்டும் திருட்டு நடைபெற்றுள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT