காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் நாய்கள் விரட்டிக் கடித்ததில் காயமடைந்த புள்ளிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
சிவன்மலை பகுதிக்கு அவ்வப்போது வனப் பகுதிகளிலிருந்து புள்ளிமான்கள் வழித்தவறி வருகின்றன. இவற்றை நாய்கள் விரட்டி கடிப்பதால், தோட்டம், காடுகளில் உள்ள கம்பி வேலிகளில் மான்கள் சிக்கிக் கொள்கின்றன.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை 8 மணியளவில், சிவன்மலை அருகே உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் சுற்றித் திரிந்த ஒரு புள்ளிமானை நாய்கள் துரத்திச் சென்றன. அப்போது அந்த மான் அங்குள்ள ஒரு கம்பி வேலிக்குள் சிக்கிக் கொண்டது.
மானின் கழுத்துப் பகுதியில் நாய் கடித்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், புள்ளிமானை மீட்டு, காங்கயம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வன அலுவலா் செல்வராஜ், மானை மீட்டு, காங்கயம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தாா். இருப்பினும் அது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.