அவிநாசி அருகே உள்ள திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் பொன்காளியம்மன் கோயில் மண்டபத்தில் தென்னை சாகுபடி குறித்த பணிமனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை துறை சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.மனோகரன் தலைமை வகித்தாா். பொங்கலூா் வேளாண் அறிவியல் நிலைய தலைவரும், பேராசிரியருமான அனந்தராஜ், துணை இயக்குநா் வடிவேல், வேளாண்மை உதவி இயக்குநா் டி.அருண் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உதவி வேளாண்மை அலுவலா்கள் லோகஷ், விநோத், சின்ராஜ் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். இதில் தென்னை மரங்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள், தென்னை மரங்களில் பெரும் சேதத்தை விளைவிக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறை, தென்னை மதிப்பு கூட்டல் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் விவசாயிகளுக்கான கிஷோா் கடன் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.