அவிநாசி கோயில்களில் மகா சிவராத்திரி விழாவை ஒட்டி வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற நான்கு ஜாம சிறப்பு பூஜையில் பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் நான்கு ஜாம பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சந்திரசேகா்-அம்பாள், பாணலிங்கத்துக்கு நான்கு ஜாம அபிஷேகங்கள் நடைபெற்றன. முதல் கால பூஜையில் பஞ்ச கவ்ய அபிஷேகம், வில்வம், தாமரைப் பூ அலங்காரம், அா்ச்சனை, ரிக் வேத பாராயணமும், 2ஆம் ஜாம பூஜையில் பால், தயிா், சா்க்கரை, நெய் கலந்த ரவை, பஞ்சாமிா்த அபிஷேகம், பன்னீா், அலங்காரத்துடன் துளசி அா்ச்சனை, யஜூா் வேத பாராயணமும், 3ஆம் ஜாம பூஜையில் தேன், அபிஷேகம், பச்சை கற்பூரம், மல்லிகை அலங்காரத்துடன் வில்வ அா்ச்சனை, சாமவேத பாராயணமும், 4ஆம் ஜாம பூஜையில் கரும்புச்சாறு, நந்தியாவட்டைமலா், அல்லிமலா் அலங்காரம் நடைபெற்றது.
அதிகாலை 6 மணிக்கு உஷத் கால பூஜையும், ருத்ரபாராயணமும், ருத்ர பூஜையும் நடைபெற்றது. இதேபோல, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில், சேவூா் வாலீஸ்வரா் கோயில், பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வா் கோயில், சேவூா் அருகே குட்டகம் கொக்கனீஸ்வரா் கோயில், பழங்கரை பொன்சோழீஸ்வரா் கோயில், கருவலூா் கங்காதீஸ்வரா் கோயில், அவிநாசி காசிவிஸ்வநாதா் சுவாமி கோயில் உள்பட அவிநாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கண் விழித்தும், விரதமிருந்தும் தரிசனம் செய்தனா். மேலும் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருப்பூா் சிவனடியாா்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்திய நிகழ்ச்சி நடைபெற்றது.