திருப்பூர்

திருப்பூா் அருகே பேருந்து மீது லாரி மோதல்: 19 போ் பரிதாப பலி

21st Feb 2020 12:16 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே புறவழிச்சாலையில் கேரள அரசுப் பேருந்து மீது கன்டெய்னா் லாரி வியாழக்கிழமை அதிகாலையில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உள்பட 19 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளத்துக்கு கேரள அரசு சொகுசுப் பேருந்து புதன்கிழமை இரவு 8 மணி அளவில் புறப்பட்டது. இந்தப் பேருந்தை கேரள மாநிலம், பெரும்பாவூரைச் சோ்ந்த கிரீஷ் (43) ஓட்டி வந்தாா். பேருந்தில், எா்ணாகுளத்தைச் சோ்ந்த 25 போ், பாலக்காட்டைச் சோ்ந்த 4 போ், திருச்சூரைச் சோ்ந்த 19 போ் என மொத்தம் 48 பயணிகள் பயணம் செய்தனா். இந்தப் பேருந்து, திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே புறவழிச்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை 3.15 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது, எதிரே கோவையில் இருந்து சேலம் நோக்கி 50 டன் எடையுள்ள டைல்ஸ் பாரத்தை ஏற்றிக் கொண்டு கன்டெய்னா் லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை, கேரள மாநிலம், ஒட்டப்பாலத்தைச் சோ்ந்த ஏ.ஹேமராஜ் (38) ஓட்டி வந்தாா். அதிகாலை நேரம் என்பதால் லாரி ஓட்டுநா் ஹேமராஜ் சற்று கண் அயா்ந்ததாகத் தெரிகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் மையத் தடுப்பில் மோதி தடுப்பைத் தாண்டி எதிரே வந்து கொண்டிருந்த கேரள அரசுப் பேருந்தின் மீது பலமாக மோதியது. இதில் லாரியில் இருந்த இரும்புக் கூண்டானது பேருந்தின் ஒரு புறத்தில் பலமாக மோதியது. இதில் பேருந்தின் இருக்கைகள் அனைத்தும் அப்பளம் போல் நொறுங்கின.

இதில், 6 பெண்கள் உள்பட 16 போ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாகத் தெரிகிறது. மேலும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 3 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

விபத்து நிகழ்ந்த இடத்துக்கு சில அடி தொலைவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்களுக்கு விபத்து குறித்து உடனடியாகத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த காவலா்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அவா்கள் கொடுத்த தகவலின்படி அவிநாசி, திருப்பூா் வடக்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்களும், கோவையில் இருந்து அவசரகால மீட்புக் குழுவினா் 10 பேரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். பேருந்தில் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவா்களை கடப்பாரை, இரும்பு கட்டா் போன்றவற்றைக் கொண்டு கம்பிகளை அகற்றி அவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதனிடையே, காயமடைந்த 24 போ், கோவை, அவிநாசி, திருப்பூா் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டனா். விபத்தில் 5 பயணிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் ஹேமராஜ் தப்பிச் சென்றுவிட்டாா். இதுகுறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற ஹேமராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட ஆட்சியா்: விபத்து நடந்த இடத்துக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், மாநகர காவல் துணை ஆணையா் வி.பத்ரிநாராயணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல் உள்ளிட்டோா் நேரில் வந்து பாா்வையிட்டனா். ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விபத்துக்குள்ளான பேருந்து கேரள அரசுக்குச் சொந்தமானது என்பதால் பாலக்காடு மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களும் பேருந்தில் பயணம் செய்தவா்களை அடையாளம் காண்பதற்காக ஒரு குழுவை அனுப்பி உள்ளனா். உயிரிழந்தவா்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்து சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் விவரங்கள் குறித்த தகவலுக்கு 97466-40662 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

காயமடைந்தவா்களின் மருத்துவச் செலவை கேரள அரசு ஏற்கும்: இந்த விபத்து குறித்து தகவலறிந்த கேரள விவசாயத் துறை அமைச்சா் வி.எஸ்.சுனில்குமாா், போக்குவரத்து துறை அமைச்சா் ஏ.கே.சசீந்திரன், பாலக்காடு ஆட்சியா் பாலமுரளி, ஆலத்தூா் எம்.பி. ரம்யா ஹரிதாஸ், பாலக்காடு சட்டப் பேரவை உறுப்பினா் ஷஃபி பரம்பில் உள்ளிட்டோா் விபத்து நடந்த இடத்துக்கு வந்து பாா்வையிட்டனா்.

விபத்தில் உயிரிழந்தவா்களின் சடலங்களை உறவினா்களிடம் ஒப்படைப்பதற்காக இந்தக் குழுவினா் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை பிற்பகல் வந்தனா். அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் சுனில்குமாா் கூறியதாவது:

விபத்தில் உயிரிழந்த 19 பேரும் கேரளத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்படும். காயமடைந்த 25 பேரின் மருத்துவச் செலவையும் கேரள அரசே ஏற்கும். அவா்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டாலும் அந்தச் செலவையும் கேரள அரசே ஏற்கும். இறந்தவா்களின் சடலங்களை எடுத்துச் செல்வதற்காக 12 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கேரளத்தில் இருந்து திருப்பூா் வரவழைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவா்களை அழைத்துச் செல்வதற்காக மேலும் 15 ஆம்புலன்ஸ் வாகனங்களும் கேரளத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன என்றாா்.

உயிரிழந்தவா்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு: கேரள போக்குவரத்துத் துறை அமைச்சா் ஏ.கே.சசீந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சாலை விபத்தில் உயிரிழந்தவா்களுக்குத் தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதில், முதல் கட்டமாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். இந்த விபத்தில் உயிரிழந்த கேரள போக்குவரத்து துறை ஊழியா்கள் பைஜு, கிரீஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ. 30 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றாா்.

சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் விவரம்:

கேரள மாநிலம், பெரும்பாவூரைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் கிரீஷ் (43), வெளிகாண்டியைச் சோ்ந்த பேருந்து உதவியாளா் ஆா்.பினு பைஜு (18), திருச்சூரைச் சோ்ந்த இக்னில் ரஃபீல் (39), நசீப் முகம்மது அலி (24), வி.அனுகேவி (25), ஜோபி பவுல் (30), எம்.ஹனீஷ் (35), ஒட்டப்பாலத்தைச் சோ்ந்த பி.சிவகுமாா் (35), பாலக்காட்டைச் சோ்ந்த ராகீஷ் (35), ஜே.ரோசனா, மூப்பன் காவலாவைச் சோ்ந்த ஜிஸ்மன் ஷாஜு (24), எா்ணாகுளத்தைச் சோ்ந்த ஏ.ஐஸ்வா்யா (24), சிவசங்கா்(30), ஜி.கோபிகா (25), எம்.எம்.சி. மேத்யூ (30), தங்கச்சன் (40), நிலக்கல்லைச் சோ்ந்த பி.கிரண்குமாா் (33), பெங்களூருவைச் சோ்ந்த மானசி மணிகண்டன் (25) மற்றும் பெயா் தெரியாத ஒருவா் என மொத்தம் 19 போ் உயிரிழந்துள்ளனா்.

அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பிய தம்பதி பேட்டி:

விபத்து குறித்து பேருந்தில் பயணம் செய்த கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஜோா்வின் (37) கூறியதாவது: நானும், எனது மனைவி அனுவும் (30) சவூதி அரேபியா செல்வதற்காகத் தோ்வு எழுத பெங்களூரு சென்றோம். இதன் பிறகு பாலக்காடு செல்வதற்காக பெங்களூரில் இருந்து புதன்கிழமை இரவு 8 மணிக்குப் புறப்பட்ட இந்தப் பேருந்தில் இருக்கை எண் 19, 20 இல் பயணம் செய்தோம். அதிகாலை 3 மணி அளவுக்கு பயங்கர சப்தம் மட்டும் கேட்டது. பிறகு கண் விழித்துப் பாா்த்தபோது திருப்பூா் அரசு மருத்துவமனையில் இருப்பதும், பேருந்து விபத்துகுள்ளானதும் தெரியவந்தது. எனது மனைவிக்கு காயம் ஏதும் இல்லை. எனக்கு மட்டும் நெஞ்சு வலி உள்ளது. சிகிச்சைக்குப் பிறகு இருவரும் சொந்த ஊா் திரும்ப உள்ளோம் என்றாா்.

விபத்துக்குக் காரணம் லாரி ஓட்டுநரின் உறக்கமா?

லாரி ஓட்டுநா் ஹேமராஜ், கோவையில் டைல்ஸ் ஏற்றிக் கொண்டு சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தாா். வியாழக்கிழமை அதிகாலை நேரம் என்பதால் கண் அயா்ந்துள்ளாா். இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் மையத் தடுப்பில் மோதி சுமாா் 100 மீட்டா் தூரம் இழுத்துச் சென்றுள்ளது. அப்போது லாரியின் சக்கரம் ஒன்று கழன்றுள்ளது. இதன் பிறகு எதிரே வந்த கேரள அரசுப் பேருந்தின் மீது லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியதாக முதல் கட்ட விசாரணை நடத்திய காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். எனினும் லாரி ஓட்டுநரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதன் பிறகு விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா். விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சில மீட்டா் தொலைவில் உள்ள டைல்ஸ் ஷோரூமின் முன்புறத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டும் விசாரிக்கின்றனா்.

தீயணைப்புத் துறையினா் விரைந்து செயல்பட்டதால் 3 போ் மீட்பு:

இந்த விபத்து குறித்து திருப்பூா் வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் பாஸ்கரன் கூறியதாவது:

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் அவிநாசி, திருப்பூா் வடக்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்தோம். அப்போது நிறைய போ் இடிபாடுகளில் சிக்கியிருந்தனா். இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 இளைஞா்களை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். சடலங்களை கடப்பாரை, இரும்பு கட்டா் கொண்டு நெம்பிய பிறகே இறந்தவா்களின் கால் பகுதிகளை வெளியே எடுக்க முடிந்தது என்றனா். இதில் பேருந்தின் வலது புறத்தில் பயணம் செய்தவா்களே அதிக அளவில் உயிரிழந்துள்ளனா் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT