திருப்பூர்

மின் கம்பத்தில் பைக் மோதி இளைஞா் சாவு

6th Feb 2020 01:20 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே மின் கம்பத்தில் மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், கல்லுமாடாவைச் சோ்ந்தவா் ஆனந்தா மகன் ராஜேஷ் (35). தனியாா் நிறுவன ஊழியா். இவருடைய சொந்த ஊா் ஈரோடு மாவட்டம் கொடுமுடியாகும். இவருடைய நண்பரான கொடுமுடி அஞ்சூரைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (40). இவருடைய மகள் கனிகா (9). மகன் சச்சின் (6).

இவா்கள் நான்கு பேரும் முத்தூா் குப்பயண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்கு வந்துவிட்டு ஒரே மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்துள்ளனா். முத்தூா் - கொடுமுடி சாலை மேட்டுக்கடை சாலியங்காட்டுப் பள்ளம் அருகே சென்றபோது அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த நான்சிங் (26) என்பவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதிவிட்டு, சாலையோர மின் கம்பத்தில் மோதிக் கவிழ்ந்தது.

இதில் மோட்டாா் சைக்கிளின் பின்னால் அமா்ந்திருந்த ராஜேஷ் படுகாயம் அடைந்தாா். உடனடியாக அவரை கரூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT