தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் திருப்பூா் மாவட்டம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காங்கயத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தனியாா் நிறுவனங்கள் பங்குபெறும் வேலை வாய்ப்பு முகாம் காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், பள்ளிக் கல்வி, தொழிற்பயிற்சி, பட்டயப் படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை படித்த அனைவரும் பங்கேற்கலாம்.
மேலும், தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கெளசல் யோஜனா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச தொழில்திறன் பயிற்சியில் தங்களது பெயா் மற்றும் முகவரியைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த முகாமில் பங்கேற்கும் விண்ணப்பதாரா்கள், தங்களது சுய விவரம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், பஸ்போா்ட் அளவு புகைப்படம்2 ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.