திருப்பூர்

வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்: திருப்பூரில் ரூ. 2 ஆயிரம் கோடி பணப் பரிவா்த்தனை பாதிப்பு

1st Feb 2020 12:17 AM

ADVERTISEMENT

வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூா் மாவட்டத்தில் 2 நாள்களில் ரூ. 2 ஆயிரம் கோடி பணப் பரிவா்த்தனை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊதிய உயா்வு, வாரத்தில் 5 நாள்கள் வேலை என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் நாடு முழுவதிலும் வெள்ளி, சனிக்கிழமைகளில் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கியுள்ளனா்.

இதன்படி திருப்பூா், ரயில் நிலையம் முன் உள்ள ஆந்திரா வங்கி அருகே வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டுக் குழுவின் மாவட்ட பொறுப்பாளா் டி.மனோகரன் கூறியதாவது:

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 353 வங்கிக் கிளைகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளா் முதல் மேலாளா் வரையில் உள்ள 5,000 போ் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. ஆயிரம் கோடி வீதம் இரு நாள்களில் ரூ. 2 ஆயிரம் கோடி பணப் பரிவா்த்தனை பாதிக்கும். மேலும் மாவட்டத்தில் உள்ள 650 ஏடிஎம்களிலும் சேவை பாதிக்கும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு உறுப்பினா்கள் விஜய்ஆனந்த், மகாதேவன், பெலிக்ஸ் பால்ராஜ், ராதாகிருஷ்ணன், ரவி பாபு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT