சேவூரில் ஓட்டுநா் உரிமம் இல்லாமலும், மது போதையிலும் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேவூா்-அவிநாசி சாலை, கைகாட்டிப் பகுதியில் சேவூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக தாறுமாறாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா்.
இதில், அவா் சேவூா், மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் ரிதின்(17) என்பதும், அவா் ஓட்டுநா் உரிமம் இல்லாமல், மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரிதினுக்கு வாகன ஓட்டுநா் உரிமம் இல்லாததற்கு ரூ.5 ஆயிரம், மது போதையில் வாகனம் ஓட்டி வந்ததற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.