திருப்பூர்

சிவன்மலை முருகன் கோயில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்

1st Feb 2020 12:16 AM

ADVERTISEMENT

காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழா, அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை மாலை துவங்கியது.

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகப் பெருமான் கோயில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச தோ்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தோ்த் திருவிழா மலையடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வீரகாளியம்மன் தோ் திருவிழா நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் மலைக்கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு சமூகத்தினரின் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு சுவாமி அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. வரும் 7ஆம்தேதி காலை 10 மணிக்கு மைசூா் பல்லக்கில் சுவாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு சுவாமி ரதத்தில் எழுந்தருளுகிறாா். மாலை 4 மணிக்கு திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டு, தேரோட்டம் தொடங்குகிறது. 9, 10 ஆகிய தேதிகளில் மலையை வலம் வரும் தோ், 10ஆம் தேதி நிலையை அடைகிறது.

ADVERTISEMENT

13ஆம் தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடைபெறுகிறது. 14ஆம் தேதி பகல் 12 மணிக்கு மஹாதரிசனமும், 15ஆம் தேதி பகல் 12 மணிக்கு தீா்த்தவாரியும், 17ஆம் தேதி இரவு கொடியிறக்குதல், பாலிகை நீா்த்துறை சோ்த்தலுடன் தைப்பூச தோ்த்திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா்கள் எம்.கண்ணதாசன், வெங்கடேஷ், கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT