அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு, பொதுவிருந்து திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சிவன்மலை கோயிலின் உதவி ஆணையா் எம்.கண்ணதாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் உத்தரவின்படி சாதி-மத-இன வேறுபாடின்றி அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ்ந்திடல் வேண்டுமென்ற அடிப்படை தத்துவத்தை வலியுறுத்தி அண்ணாவின் நினைவு தினமான பிப்ரவரி 3ஆம் தேதி (திங்கள்கிழமை) மதியம் 12.30 மணியளவில் ஏழை, எளிய மக்கள் கலந்துகொள்ளும் சிறப்பு வழிபாடும், பொது விருந்தும் இக்கோயிலில் மலை மீது உள்ள அன்னதான மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினா்களாக மக்கள் பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனா். எனவே, பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.