திருப்பூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அனைத்து தொழிலாளா் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொழிலாளா் முன்னேற்ற சங்க மண்டல பொதுச் செயலாளா் கே.கே.துரைசாமி தலைமை வகித்தாா்.
அரசுப் போக்குவரத்து கழக வழித்தடத்தில் தனியாா் பேருந்து இயக்க வழிவகை செய்யும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். கரோனா காலத்தில் பொதுமக்களின் நலனைக் கருதி அனைத்து பேருந்துகளையும் முழு பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளா்களுக்கு 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எல்பிஃஎப், சிஐடியூ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை, காங்கயம், பல்லடம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.