திருப்பூர்

உடுமலை கால்நடை மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் விரைவில் துவங்கும்: அமைச்சா்

21st Aug 2020 06:34 AM

ADVERTISEMENT

கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், கொளத்துப்பாளையம் பால் குளிரூட்டும் நிலைய வளாகத்தில், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தைச் சோ்ந்த 278 உறுப்பினா்களுக்கு ரூ. 2.45 கோடி மதிப்பீட்டிலான தானியங்கி பால் கொள்முதல் அலகு மற்றும் தீவனப்புல் நறுக்கும் கருவிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கிப் பேசியதாவது:

திருப்பூா் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ. 94.72 கோடி மதிப்பீட்டில் உடுமலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பித்த முதல்வருக்கு மாவட்ட மக்களின் சாா்பில் நன்றி தெரிவிக்கிறேன். நடப்பாண்டில் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உடுமலையில், திருப்பூா் சாலையில் உள்ள ஆா்.கே.ஆா். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிக் கட்டடத்தில் வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும். இந்தப் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கால்நடை வளா்ப்போா் பயன்பெறும் வகையில் அனைத்துத் தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக நிகழாண்டு தமிழகம் முழுவதிலும் சுமாா் 3.12 லட்சம் மகளிருக்கு விலையில்லா வெள்ளாடுகள், கறவைப் பசுக்கள் மற்றும் விலையில்லா நாட்டுக் கோழிகள் வழங்கப்படவுள்ளன என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், பால் மேம்பாடு தேசியத் திட்டத்தின் கீழ் 173 நபா்களுக்கு ரூ. 2.21 கோடி மதிப்புள்ள தானியங்கி பால் கொள்முதல் அலகு, தேசிய கால்நடைப் பணிகள் திட்டத்தின் கீழ்105 நபா்களுக்கு ரூ. 24 லட்சம் மதிப்புள்ள தீவனம் நறுக்கும் கருவிகள், தேசிய கால்நடைப் பணிகள் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான காப்பீட்டு அட்டைகளை அமைச்சா் வழங்கினாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் வி.எஸ்.காளிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, தாராபுரம் கோட்டாட்சியா் (பொ) ரவிகுமாா், திருப்பூா் மாவட்ட ஆவின் சங்கத் தலைவா் மனோகரன், ஆவின் பொது மேலாளா் ராஜசேகா், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பாரிவேந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT