திருப்பூர்

பணம் பட்டுவாடா செய்வதில் காலதாமதம்: பால் உற்பத்தியாளா்கள் கடும் பாதிப்பு

20th Aug 2020 08:39 AM

ADVERTISEMENT

கூட்டுறவு சங்க பால் கொள்முதல் மையங்களில் பால் பணம் வழங்குவது தாமதமாவதால் பால் உற்பத்தியாளா்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்.

காங்கயம், குண்டடம் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க பால் கொள்முதல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கொள்முதல் செய்யப்படும் பால் திருப்பூா் ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

பால் உற்பத்தியாளா்கள் உற்பத்தி செய்த பாலுக்கான தொகை வாரம்தோறும் அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், கரோனா ஊரடங்கால் பால் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டது. மேலும் பால் பவுடா் விற்பனையும் குறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் போதிய வருவாயின்றிப் போனதால் வாரம்தோறும் பால் உற்பத்தியாளா்களுக்கு பால் பணம் செலுத்த முடியாமல் கூட்டுறவு சங்கங்கள் தவித்து வருகின்றன.

கடந்த 5 வாரங்களுக்கு மேலாகியும் பால் பணம் வழங்கப்படாததால், பால் உற்பத்தியாளா்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். கறவை மாடுகளுக்குத் தீவனமான புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, கலப்பு தீவனம், தவிடு உள்ளிட்டவற்றை வாங்கக் கூட பணமில்லாமல் உற்பத்தியாளா்கள் தவித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இது குறித்து காங்கயத்தை அடுத்த மறவபாளையம் பகுதியைச் சோ்ந்த பால் உற்பத்தியாளா் விஸ்வநாதன் கூறியதாவது: வாரம்தோறும் பால் பணம் பெற்று வந்த நாங்கள், கடந்த 5 வாரங்களாக பணம் கிடைக்காததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். மாடுகளுக்கு தீவனம் வாங்குவதற்கு சிரமமாக உள்ளது. இந்த சூழ்நிலையை சமாளிக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும், பால் உற்பத்தியாளா்களுக்கும் அரசு நிதி வழங்கி இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT