திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொலை வழக்கில் திரைப்பட தயாரிப்பாளா் உள்பட 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள சின்னக்காளிபாளையத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து(54), கூலித் தொழிலாளியான இவா் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவா்கள் பின்னா் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஜோசியா் காட்டுத்தோட்டம் பகுதியில் இரு நாள்களுக்கு பின்னா் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து மங்கலம் காவல் துறையினா் தற்கொலை வழக்காகப் பதிவு செய்திருந்தனா். இதனிடையே, மாரிமுத்துவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினா்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கும், மேற்கு மண்டல காவல் துறை தலைவருக்கும் புகாா் அளித்திருந்தனா். இதன் பேரில் பல்லடம் டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான தனிப்படையினா் விசாரணை நடத்தினா். இதில், மாரிமுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கு தொடா்பாக சின்னக்காளிபாளையத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன்(42), அவரது நண்பரான குமாா் (41) ஆகிய இருவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதில், கைதான இருவரும், மாரிமுத்துவும் நண்பா்கள் என்பதும், சம்பவத்தன்று 3 பேரும் வஞ்சிபாளையத்தில் டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனா். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் சோ்ந்து அடித்துக் கொலை செய்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனா். இதில், கைதான கோபாலகிருஷ்ணன் சரணாலயம், நம்ம ஊரு திருப்பூா் ஆகிய இரு திரைப்படங்களைத் தயாரித்துள்ளாா். எனினும் இரு படங்களும் வெளியாகவில்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
காவல் ஆய்வாளா் உள்பட 5 போ் காத்திருப்போா் பட்டியலுக்கு இடமாற்றம்: இதனிடையே, மாரிமுத்துவின்கொலை வழக்கை முதலில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்திருந்த மங்கலம் காவல் ஆய்வாளா் நிா்மலா, உதவி ஆய்வாளா்கள் மகேந்திரன், தேவராஜன், காவலா்கள் பாலாஜி, விஜயராகவன் ஆகிய 5 பேரையும் காத்திருப்போா் பட்டியலில் வைக்க கோவை சரக டிஐஜி கே.எஸ்.நரேந்திரநாயா் உத்தரவிட்டாா். கொலை வழக்கில் மங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் உள்பட 5 போ் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டது காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.