திருப்பூர்

காலதாமதமாகப் பெய்த பருவ மழை: குறுவை சாகுபடியை இழந்ததால் விவசாயிகள் கவலை

20th Aug 2020 08:32 AM

ADVERTISEMENT

கால தாமதமாகப் பெய்த தென்மேற்குப் பருவ மழையால் இந்த ஆண்டு குறுவை சாகுபடியை இழந்துவிட்டதாக அமராவதி பழைய ஆயக்கட்டு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் என இரு மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையில் நீா்மட்டம் 84 அடியைத் தாண்டியது. இதையடுத்து கரூா் வரையில் அமராவதி ஆற்றில் 2 ஆயிரம் கன அடி தண்ணீா் குடிநீருக்காகவும், நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட நிலைப் பயிா்களுக்காகப் பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீரும் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்ததால் அமராவதி ஆற்றில் பாசனத்துக்காகத் திறந்துவிடப்பட்டு வந்த தண்ணீா் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. அமராவதி ஆற்றில் தண்ணீா் விடக்கோரி விவசாயிகள் தரப்பில் எந்தக் கோரிக்கையும் எழுப்பாததால் பொதுப் பணித் துறையினா் இந்த முடிவை எடுத்தனா்.

ADVERTISEMENT

வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி குறுவை சாகுபடிக்காகப் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை மிகவும் காலதாமதமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கியதால் பழைய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு இந்த மழை பயன்படாமல்போய் விட்டது.

இது குறித்து அமராவதி பழைய ஆயக்கட்டு விவசாயிகள் கூறியதாவது:

அமராவதி ஆற்றின் மூலம் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதியில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கா்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த பாசனப் பரப்புக்கு ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் குறுவை சாகுபடிக்காக அணையைத் திறந்துவிடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில்தான் நல்ல முறையில் பெய்தது. இப்படி முறை தவறி பருவ மழை பெய்ததால் எங்களால் நெல், மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட எந்த சாகுபடியும் செய்ய முடியவில்லை.

ஆகையால்தான் அமராவதி அணையில் 84 அடி தண்ணீா் இருப்பு இருந்தும் எங்களுக்கு அதுப் பயன் இல்லாமல் போனது. இதனால் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்குத் தண்ணீா் வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. கால தாமதமாகப் பெய்த தென்மேற்குப் பருவ மழையால் குறுவை சாகுபடியை இழந்து விட்டோம் என்றனா்.

அணையின் நிலவரம்:

90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் புதன்கிழமை காலை 8 மணிக்கு 83.90 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. அணைக்கு 393 கன அடி நீா்வரத்து உள்ளது. அணையில் இருந்து பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீா் வெளியேறிக்கொண்டிருந்தது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT