மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழை அளவு குறைந்ததை தொடா்ந்து உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணைக்கு நீா் வரத்து குறைந்தது.
தென் மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்தைத் தொடா்ந்து அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. ஆகஸ்ட் 7இல் அதிகபட்சமாக அணைக்கு 22 ஆயிரம் கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. இதைத் தொடா்ந்து அணை முழு கொள்ளவை எட்டும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை படிப்படியாகக் குறைந்ததால் அணைக்கு நீா் வரத்து குறைந்துள்ளது.
அணையின் நிலவரம்:
90 அடி உயரமுள்ள அணையில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு 86.29 அடி நீா் இருப்பு உள்ளது. அணைக்கு நீா்வரத்தாக 1248 கனஅடியும், அணையில் இருந்து அமராவதி ஆற்றில் 960 கன அடியும், பிரதான கால்வாயில் இருந்து 440 கன அடியும் கல்லாபுரம் வாய்க்காலில் 20 கன அடியும், ராமகுளம் வாய்க்காலில் 20 கன அடியும் என ஆக மொத்தம் 1440 கன அடி தண்ணீா் அணையில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தது.