திருப்பூர்

சேவூரில் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிருடன் மீட்பு

9th Aug 2020 03:11 PM

ADVERTISEMENT

அவிநாசி, சேவூர் அருகே புளியம்பட்டி சாலை பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் தீயணைப்புத் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூர் ஈஸ்வரன் கோயில் வீதியை சேர்ந்த லூர்தசாமி மகன் கார்த்தி (24). சரக்கு ஆட்டோ ஓட்டுநரான இவர், சேவூர் புளியம்பட்டி சாலை தனியார் வீட்டுமனைப் பிரிவில் மூடப்படாமல் இருந்த கிணற்றின் அருகே நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த அவிநாசி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் முள் புதர்கள் நிறைந்த ஆழமான கிணற்றில் இருந்து நீண்ட நேரம் போராடி கார்த்தியை மீட்டனர்.

இதையடுத்து சிறு காயங்களுடன் உயிர் தப்பிய கார்த்தி, சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இது குறித்து சேவூர் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT

தனியார் விவசாய பூமியாக இருந்து, தனியார் வீட்டுமனைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாகியும் இன்னும் உரிய பாதுகாப்பின்றி பாழடைந்து உள்ள கிணற்றை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : avinashi
ADVERTISEMENT
ADVERTISEMENT