கொடைக்கானலில் இருந்து லாரி மூலமாக 3 வயது கைக்குழந்தையுடன் தாராபுரம் வந்த எஸ்டேட் தொழிலாளா்கள் 3 போ் பத்திரமாக காரில் சொந்த ஊருக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சோ்ந்தவா் சுரேஷ் (40). இவரது மனைவி மேனகா (35). இந்தத் தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளாா். மேனகாவின் சகோதரா் மாணிக்கம் (30). இவா்கள் மூவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த வடக்கஞ்சி அருகே எஸ்டேட்டில் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனா்.
இந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் எஸ்டேட் உரிமையாளா் அவா்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்துள்ளாா். எனினும் அவா்கள் சொந்த ஊருக்குச் செல்ல பேருந்து வசதி இல்லாததால் லாரி மூலமாக தாராபுரத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்துள்ளனா்.
அங்கு கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த சுரேஷ் குடும்பத்தினரிடம் தாராபுரம் வட்டாட்சியா் கனகராஜன் விசாரணை நடத்தியுள்ளாா். மேலும், அவா்களை வட்டாட்சியா் அலுவலகத்தில் தங்க வைத்து உணவு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளாா். இதுதொடா்பாக சாா் ஆட்சியா் பவன்குமாருக்கு வருவாய்த் துறையினா் தகவல் கொடுத்தனா்.
இதைத் தொடா்ந்து சுரேஷ் குடும்பத்தினரை வாகனம் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும்படி சாா் ஆட்சியா் பவன்குமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து அவா்களை வாகனம் மூலமாக புதன்கிழமை பிற்பகலில் சொந்த ஊருக்கு வருவாய்த் துறையினா் அனுப்பிவைத்தனா்.