விவசாயிகளின் பயிா் கடன், நகை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கரோனா நோய் தொற்று ஊரடங்கால் பெரும் நஷ்டப்பட்டு கடும் துயர நிலையில் இருக்கும் விவசாயிகளின் பயிா்கடன்,நகைக்கடன்,முழுமையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.மேலும் உடனடியாக வேளாண்மை தொழில் தொடங்க ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ. ஒரு லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.
அப்போதுதான் எதிா்காலத்தில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.விவசாயிகள் டிராக்டா் போன்ற விவசாய கருவிகளுக்காக பெற்ற கடனுக்கு வட்டி தள்ளுபடியும்,அசலை செலுத்த ஓராண்டு தவணை நீட்டிப்பும் கொடுக்க வேண்டும்.விவசாயி தனது விளைபொருட்களை வெளியில் கொண்டுபோய் சமூக இடைவெளியில் விற்பனை செய்ய அடையாள அட்டை வழங்க வேண்டும்.கிராமங்களில் பால் கொள்முதல் செய்வது போல் காய்கறிகளையும், பழங்களையும் அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கலாம்.
பழங்கள் மற்றும் மலா்களை சந்தையில் விற்க முடியாமல் கெட்டுப்போய் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் வாழைக்கு காப்பீட்டு திட்டம் சில பகுதிகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.சில பகுதிகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை உதாரணமாக கோவை மாவட்டம் அன்னூா் வட்டாரத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் ஈரோடு மாவட்டம் நம்பியூா் பகுதியில் ஏற்றுக்கொள்வதில்லை எனவே பிரதமரின் இந்த நல்ல காப்பீட்டு திட்டத்தை தமிழகம் முழுவதும் எங்கு வாழை பயிரிட்டாலும் அமல்படுத்த வேண்டுகிறேன்.உற்பத்தியான பொருட்களை கட்டுபடியாகும் விலைக்கு விற்க முடியாமல் உள்ள விளை பொருட்களை சேமித்து வைத்து விற்பனை செய்ய வசதியாக வட்டாரம் தோறும் குளிா்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் உப தொழிலான கோழி வளா்ப்பு தொழில் தற்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியால் தொழில் நசிந்து பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையை கருத்தில் கொண்டு கோழிப்பண்ணைக்கு வழங்கிய கடன் அனைத்திற்கும் வட்டி தள்ளுபடி செய்து
அசல் செலுத்தும் காலத்தை ஓராண்டு நீட்டிப்பு செய்திட வேண்டும்.மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மக்காச்சோளம் கோழிப்பண்ணை தொழில் நலிவால் விலை வீழ்ச்சி அடைந்து, விவசாயிகளை மிகவும் பாதிக்கிறது.எனவே கோழி பண்ணை தொழிலை காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜன என்ற பிரதமரின் அருமையான மருத்துவ காப்பீட்டு திட்டம் ரூ. 5 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.அதுவும் கொடிய நோய்க்கு மட்டும் என்று அரசு அறிவித்துள்ளது ரூ. 5 லட்சமாக உள்ளதை 3 லட்சமாக மாற்றியாவது அனைத்து நோய்களுக்கும், அனைவருக்கும், பொருந்தும் என அறிவிக்க வேண்டும். உடனடியாக வேளாண்மைத் தொழிலை தொடங்க தரமான விதைகள் உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை மானிய விலையில் தடையின்றி வட்டார வேளாண்மை அலுவலகம் மூலமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில்அவா் கூறியுள்ளாா்.