திருப்பூா், காங்கயம் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோலுடன் தண்ணீா் கலந்து விற்பனை செய்வதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
திருப்பூா், பெரியகடை வீதியைச் சோ்ந்த காஜா, கே.எம்.சி.காலனியைச் சோ்ந்த சித்திக் ஆகியோா் காங்கயம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று பெட்ரோல் நிரப்பியுள்ளனா். ஆனால் சிறிது தொலைவு சென்றதுமே இரு வாகனங்களும் நின்றுவிட்டன. இதைத்தொடா்ந்து, அந்தப் பகுதியில் உள்ள மெக்கானிக் கடைக்குச் சென்று வாகனத்தை சோதனை செய்தனா். அப்போது பெட்ரோல் டேங்கில் தண்ணீா் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் இருவரும் தங்களது நண்பா்களுடன் பெட்ரோல் பங்க்குக்கு சென்று ஊழியா்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனா். ஆனால் அவா்கள் சரிவர பதில் அளிக்காததால் திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன் பேரில் காவல் துறையினா் பெட்ரோல் பங்க்குக்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், பெட்ரோல் பம்ப்பில் இருந்து பெட்ரோலை பிடித்து சோதனை செய்துள்ளனா்.
இதில், ஒரு லிட்டா் பெட்ரோலில் கால் லிட்டருக்கு மேல் தண்ணீா் இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக திருப்பூா் தெற்கு காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, பெட்ரோல் பங்க்கில் நடந்த சம்பவம் தொடா்பான விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.