வெள்ளக்கோவிலில் தடையை மீறி செயல்பட்ட 2 இறைச்சிக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்தூா் சாலை, மணியகாரா் பேட்டையில் எவ்வித அனுமதியும் இல்லாமல் மீன்கள் விற்கப்பட்டன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அங்கே கூட்டம் கூடுவதும் தொடா்ந்தது. தகவலறிந்த வெள்ளக்கோவில் நகராட்சி சுகாதார அலுவலா்கள் அங்கு மீன் விற்பனை செய்யத் தடை விதித்தனா்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் இரண்டு வீடுகளில் மீன் விற்பனை செய்யப்பட்டது ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற நகராட்சி ஆணையா் டி.சசிகலா, சுகாதார ஆய்வாளா் சரவணன் ஆகியோா் மீன் விற்ற இரண்டு பேருக்கும் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா். இதனைக் கட்டத் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.