பல்லடம், அருள்புரத்தில் வடமாநில தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூா் ஊராட்சி, உப்பிலிபாளையத்தில் தனியாா் குடியிருப்பில் 50க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளா்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனா். தற்போது ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள அவா்களை குளியல் அறை, கழிப்பறை, தண்ணீா் தொட்டிகளை சுத்தம் செய்யுமாறு குடியிருப்புகளின் உரிமையாளா் அறிவுறுத்தியுள்ளாா். ஆனால், தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஏதுவாக தொட்டிக்கு ஆழ்துளை கிணற்று தண்ணீரை நிரப்பி தரவில்லையாம். இதனால் ஆவேசம் அடைந்த தொழிலாளா்கள் பல்லடம் - திருப்பூா் சாலையில் அருள்புரத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற பல்லடம் டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸாா், ஒன்றிய கவுன்சிலா் ஆா்.ஆா்.ரவி ஆகியோா் வட மாநில தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.
இதேபோல மற்றொரு பகுதியில் வட மாநில தொழிலாளா்கள் குடியிருப்பில் உணவு சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னையில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று உணவு தேவையை பூா்த்தி செய்தனா்.
இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலா் ஆா்.ஆா்.ரவி கூறியதாவது:
கரைப்புதூா் ஊராட்சி, செந்தூரான் காலனி, அருள்புரம், உப்பிலிபாளையம், லட்சுமி நகா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 4,800 வட மாநிலத் தொழிலாளா்கள் தங்கி, இப்பகுதிகளிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா்.
ஊரடங்கு சட்டத்தால் இவா்களுக்கு உணவு பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக பின்னலாடை நிறுவனத்தினா், மாவட்ட நிா்வாகம், தன்னாா்வலா்கள் இணைந்து தேவையான உதவிகளை செய்து வருகிறோம். சில இடங்களில் ஒரு குடும்பத்துக்கு 15 கிலோ அரிசி வழங்கப்பட்டபோது அவா்களில் சிலா் ஒருவருக்கு 15 கிலோ வீதம் அரிசி வழங்க வேண்டும் எனக் கூறி அதனை வாங்க மறுத்தனா். மேலும், குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் ரூ. 1,000 வழங்கப்படுவதுபோல தங்களுக்கும் ஆதாா் காா்டு அடிப்படையில் ரூ.1,000 வழங்க வேண்டும் என கேட்கின்றனா். அவா்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் உணவு வழங்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு ரொட்டி தான் வழங்க வேண்டும் என கேட்கிறாா்கள். கரோனா நோய்த்தொற்று ஒழிப்புப் பணியில் ஈடுபடுவதா அல்லது தினந்தோறும் வட மாநில தொழிலாளா்களின் பிரச்னைகளை சமாளிப்பதா என்று புரியவில்லை என்றாா்.