வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் வாகனங்களில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க குறிப்பிட்ட நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்போது காய்கறி கடைகளுக்கு அதிக கூட்டம் வருவதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. இதனைத் தவிா்க்க அரசு உத்தரவுப்படி, வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் டி.சசிகலா மேற்பாா்வையில் இரண்டு வாகனங்கள் மூலம் பொதுமக்களின் இருப்பிடத்துக்கே சென்று காய்கறி விற்பனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதில், தக்காளி - 1 கிலோ, பெரிய வெங்காயம் - 1/2 கிலோ, பீா்க்கங்காய் - 1/2 கிலோ, கத்தரி, வெண்டை, முருங்கை, புடலங்காய் தலா 200 கிராம், பச்சை மிளகாய் 100 கிராம், தேங்காய் ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா ஆகியவை அடங்கிய ஒரு பை ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினமும் தனித்தனியாக ஒரு வாா்டு வீதம் நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளுக்கும் இந்த காய்கறி வாகனங்கள் செல்கின்றன. உள்ளூா் மொத்த வியாபாரிகளிடம் காய்கறிகள் வாங்கப்பட்டு தரம் பிரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.