திருப்பூரில் இருந்து தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்த 2 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது சனிக்கிழமை தெரியவந்துள்ளது.
திருப்பூா் மாவட்டம் முழுவதிலும் கரோனா நோய்த் தொற்று தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னா் லண்டன் சென்று திரும்பிய 48 வயது ஆணுக்கு கரோனா அறிகுறி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவா் கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.
இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்னா் தில்லியில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்று திரும்பிய திருப்பூா் மாநகரைச் சோ்ந்த 9 போ் திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் 38 மற்றும் 43 வயதுடைய இருவருக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட கரோனா நோய்த் தொற்றுக்கானஅறிகுறிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவா்களின் ஆலோசனையின்பேரில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் இருந்து 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு அண்மையில் அனுப்பிவைத்தனா். அங்கு அவா்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோசனையில் கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.