வெள்ளக்கோவில் ஊராட்சிப் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் தனித்தனி டெங்கு ஒழிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்களில் தலா இரண்டு பேர் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை குறைந்தது 100 வீடுகள், தொழில் நிறுவனங்களைப் பார்வையிட்டு வருகின்றனர். இவர்களுக்கு கையுறை, டார்ச் லைட், பிளாஸ்டிக் குச்சி, தண்ணீர் வடிகட்டி, பிளீச்சிங் பவுடர், திரவ மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் லார்வா புழுக்கள் நல்ல தண்ணீரில் அதிகம் வளரக் கூடியவை. இவை மழைக் காலங்களில் பரவுகின்றன. இதுகுறித்துப் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதிகமான லார்வா புழுக்கள் இருக்கும் வீடுகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குறித்து அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்பைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும் என மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.