காங்கயம் தாலுகாவில் கீழ்பவானி பாசன வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ள நீரினைக் கொண்டு விவசாயிகள் சம்பா நெல்நடவுப் பணிகளுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்காக கடந்த 16-ஆம் தேதி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரானது செப்டம்பர் 21-ஆம் தேதி திருப்பூர் மாவட்ட கீழ்பவானி பாசனப் பகுதிக்கு வந்தடைந்தது. இந்த நீரினைப் பயன்படுத்தி காங்கயம் வட்டத்தில் திட்டுப்பாறை, மருதுறை, நத்தக்காடையூர், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 1,500 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்ய விவசாயிகள் நாற்று விடும் பணிகளை துவங்கியுள்ளனர்.
இப்பகுதிகளில் மொத்த பாசனப் பரப்பான 18 ஆயிரம் ஏக்கரில் 5 சதவீதம் அளவுக்கே நெல் நடவுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று
வருகிறது. கீழ்பவானி வாய்க்காலில் நீர்வரத்து இருந்தால் உணவுக்கும், கால்நடைகளுக்கான தீவனப் பற்றாக்குறையும் ஓரளவு குறையும் என இப்பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.