திருப்பூரில் தந்தி சட்ட நகலை எரிக்க முயன்ற 51 விவசாயிகள் கைது

திருப்பூரில் விவசாயிகளின் நில உரிமையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்திய சட்ட நகலை

திருப்பூரில் விவசாயிகளின் நில உரிமையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்திய சட்ட நகலை எரிக்க முயன்ற 4 பெண்கள் உள்பட 51 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். 
திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மேலும், விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து நிலங்களை அளவீடு செய்தும், எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது காவல் துறையினர் பொய் வழக்குப் போட்டு கைது செய்து வருவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1885 ஆம் ஆண்டு போடப்பட்ட இந்திய தந்தி சட்டத்தை பயன்படுத்தி இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதால் அந்தச் சட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கரூர் ஆகிய 10 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய தந்தி சட்ட நகலை எரித்துப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இதன்படி திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். 
இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில், விவசாயிகள் வாழ்வாதாரத்தையும், விளைநிலத்தையும் பாதிக்கும் 1885 மற்றும் 1894 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட இந்திய தந்தி சட்டத்தைக் கைவிட வேண்டும்.  விவசாயிகள் நில உரிமையைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளைப் பாதிக்கும் இந்தத் திட்டத்தை சாலையோரங்களில் கேபிள் பதித்து பூமிக்கடியில் கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட மின் கோபுரத்துக்கும், கம்பி செல்லும் பாதைக்கும் மாத வாடகை  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையடுத்து, தந்தி சட்ட நகலை எரிக்க முயன்ற 4 பெண்கள் உள்பட 51 பேரை திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com