அவிநாசி அருகே உள்ள நெருப்பெரிச்சலில் சுகாதார ஆய்வாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பணியாளர்கள் குறைப்பு, பணி உயர்வு ரத்து செய்யும் விதமாக தமிழக அரசு 337, 338 ஆகிய அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் கடந்த 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை கருப்பு சட்டை அணிந்து பணியாற்றினர்.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட மையம் சார்பில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் நெருப்பெரிச்சல் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அலுவலகம் முன் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கோ.சிவகுமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.ராஜி, மாவட்டச் செயலாளர் எம்.பொன்னாண்டவர் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கரன், சேவூர் சுகாதார ஆய்வாளர் ரமேஷ், பொது சுகாதாரத் துறை மாவட்ட இணை செயலாளர் யோகானந்தம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜோசப் பெர்னாண்டஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொருளாளர் சௌந்தர பாண்டியன் நன்றி கூறினார்.