திருப்பூர்

மனிதக் கழிவுகளை கொட்டுவதை தடுக்கக் கோரி மறியல்

10th Sep 2019 11:18 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே நரிக்குறவர் காலனிப் பகுதியில் மனிதக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட  நரிக்குறவர் காலனிப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலையோரம் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தில் மனிதக் கழிவுகளை கொட்டி செல்கின்றனர். 
 இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினரிடம் பல முறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்,  பெருமாநல்லூர் - அவிநாசி சாலையில் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்த அவிநாசி போலீஸார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT