திருப்பூர்

திருப்பூரில் திரையரங்க வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

10th Sep 2019 06:56 AM

ADVERTISEMENT

திருப்பூர், மண்ணரை பகுதியில் உள்ள திரையரங்க வளாகத்தில் மர்ம நபர்கள் திங்கள்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர். 
திருப்பூர், மண்ணரையில் பகுதியில் உள்ள திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்சிகள் முடிந்து வழக்கம்போல பூட்டப்பட்டது. இதையடுத்து, திரையரங்க வளாகத்தில் ஊழியர்கள் மட்டும் இருந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணி அளவில் திரையரங்கம் முன்பாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து பற்றி எரிந்த தீயை ஊழியர்கள் அணைத்தனர். இதுகுறித்து திரையரங்க ஊழியர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திரையரங்கம் முன்பாக இரு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்ததும், பின்னால் அமர்ந்திருந்த நபர் பெட்ரோல் குண்டை திரையரங்கை நோக்கி வீசியதும் தெரியவந்தது.
  அப்போது முன்னால் அமர்ந்திருந்த நபருக்கு தீப்பிடித்ததும், பின்னால் அமர்ந்திருந்த நபர் தீயை அணைப்பதும் தெரியவந்தது. பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதனிடையே திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்சிக்கு மது அருந்திவிட்டு இரு நபர்கள் வந்துள்ளனர். ஊழியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள்தான் பெட்ரோல் குண்டு வீசினரா அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT