திருப்பூர்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது பின்னலாடை நிறுவனம் மீது தாக்குதல்: ஊழியர்கள் 2 பேர் காயம்; 20 பேர் மீது வழக்குப்பதிவு  

7th Sep 2019 07:22 AM

ADVERTISEMENT

திருப்பூர், அங்கேரிபாளையம் பகுதியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின் மீது பின்னலாடை நிறுவனத்துக்குள் புகுந்து சிலர் தாக்குதல் நடத்தினர். இதில், ஊழியர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகள் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன. இந்த நிலையில், அங்கேரிபாளையம் சிங்காரவேலன் நகரில் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான பின்னலாடை நிறுவனத்தின் அருகில் இரு தரப்பினர் விநாயகர் சிலைகளை வைத்திருந்தனர். இதில், ஒரு தரப்பினருக்கு சுரேஷ் நன்கொடை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மற்றொரு தரப்பினர் நிறுவனத்துக்குச் சென்று நன்கொடை கேட்டபோது உரிமையாளர் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். 
இதனால் அதிருப்தியடைந்த 50-க்கும் மேற்பட்டோர் விநாயகர் சிலை எடுத்துச் சென்ற வாகனத்தை பின்னலாடை நிறுவனத்துக்குள் அத்துமீறி கொண்டு சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த மேற்பார்வையாளர் ராமமூர்த்தி, சிவகுமார் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். மேலும்,  ஜன்னல் கண்ணாடிகள், பூந்தொட்டிகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, நிறுவனத்தில் இருந்த சிடிடிவி கேமரா பதிவைக் கொண்டு விசாரணை நடத்தி 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
இந்து முன்னணி கண்டனம்: 
இதுதொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை வெளிட்டுள்ள அறிக்கை: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஒத்துழைப்பு அளித்த மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றி. சிங்காரவேலன் நகரில் விநாயகர் சதுர்த்தி பெயரைப் பயன்படுத்தி கட்டாய வசூல் செய்ய முயற்சி செய்துள்ளனர். இத்தகைய நபர்களை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார். 
ஏற்றுமதியாளர்கள் சங்கம் கண்டனம்: 
இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஒரு சில நபர்கள் அத்துமீறி பின்னலாடை நிறுவனத்தில் புகுந்து அங்கு பணிபுரியும் தொழிலாளர்களைத் தாக்கியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொழிற்சாலை உரிமையாளரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் நடந்த இந்த நிகழ்வு கண்டிக்கத்தக்கது. காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு வன்முறை நிகழ்த்திய நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி  சார்பில்   ஆர்ப்பாட்டம்: இந்த சம்பவம் தொடர்பாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூர் கோர்ட் வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்: 
அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து ஊழியர்களைத் தாக்கியதுடன், அங்கிருந்த பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT