திருப்பூர்

பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து  காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறப்பு

7th Sep 2019 07:20 AM

ADVERTISEMENT

உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணைக்கு பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. 
பிஏபி பாசனத் திட்டத்தில் மொத்தம் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்குத் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமார் 1 லட்சம் ஏக்கர்களுக்கு முறை வைத்து தண்ணீர் விடப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் மண்டல பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து தென் மேற்குப் பருவமழை போதிய அளவில் பெய்ததால் பிஏபி தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு அதிகரித்தது. பொதுவாக ஆண்டுதோறும் ஆகஸ்டில்  4ஆம் மண்டல பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் காண்டூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சர்க்கார்பதியில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் 4ஆம் மண்டலப் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவது தள்ளிப் போனது. இதைத் தொடர்ந்து காண்டூர் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு போர்க்கால அடிப்படையில் பொதுப் பணித் துறை அதிகாரிகளால் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதற்காக சர்க்கார்பதியில் இருந்து முதலில் 320 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக உயர்த்தப்படும்.   காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து இருப்பு செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும். இதன் பின்னர் செப்டம்பர் மூன்றாவது வாரம் அல்லது நான்காவது வாரம் 4ஆம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT