திருப்பூர்

திருமூர்த்தி அணையில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் மீட்பு

4th Sep 2019 07:18 AM

ADVERTISEMENT

உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் செவ்வாய்க்கிழமை மாலை தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது.
 உடுமலை அருகே உள்ள சுற்றுலாத் தலமான திருமூர்த்திமலைக்கு கடந்த 3 நாள்கள் விடுமுறை தினத்தை ஒட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். இந்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த நண்பர்கள் 7 பேர் திங்கள்கிழமை திருமூர்த்திமலைக்கு வந்தனர். பின்னர் நண்பர்கள் அனைவரும் குளிப்பதற்காக அருகில் உள்ள திருமூர்த்தி அணைக்கு சென்றபோது ஒருவர் மட்டும் ஆழமான இடத்தில் குளித்துக் கொண்டிருந்தார்.
 அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். விசாரணையில் உயிரிழந்தவர் ஈரோடு பகுதியைச் சேர்ந்த குமார் மகன் அன்புமணி (30) என்பதும், அவர் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து உடுமலையில் இருந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அன்புமணியின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
 ஆனால் நீண்டநேரம் ஆகியும் சடலம் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரவு நேரமாகிவிட்டதால் தேடுதல் பணியை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மீண்டும் தேடுதல் பணி தொடங்கியது. அதன் பின்னர் மாலை 5 மணி அளவில் அன்புமணியின் சடலம் மீட்கப்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தளி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி 
வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT