திருப்பூர்

காங்கயம், வெள்ளக்கோவில், தாராபுரம், உடுமலையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

4th Sep 2019 07:18 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் காங்கயத்தில் 52 விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 விநாயகர் சதுர்த்தியையொட்டி காங்கயம் நகரில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் 52 விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் பொங்கலிட்டு வழிபாடும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றன. பின்னர், அனைத்துச் சிலைகளும் உடையார் காலனிக்குக் கொண்டுவரப்பட்டன.
மாலை 4 மணிக்கு நடைபெற்ற விழாவுக்கு இந்து முன்னணியின் காங்கயம் ஒன்றியத் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் ம.கொ.சி.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை காங்கயம் இந்தியன் ஆயில் டீலர் மீனாட்சிசுந்தரம் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். ஊர்வலம் உடையார் காலனியில் துவங்கி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக காங்கயம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நிறைவடைந்தது. இரவு 7.30 மணியளவில் விநாயகர் சிலைகள் கொடுமுடி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. இதில் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
வெள்ளக்கோவிலில்: வெள்ளக்கோவில் பகுதியில் ஆங்காங்கே 26 விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. அந்த இடங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை அனைத்து விநாயகர் சிலைகளையும் காங்கயம் சாலை, வீரக்குமார சுவாமி கோயில் திடலுக்குக் கொண்டுவந்து, பின்னர் நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கணபதி ஹோமம், கோ பூஜை நடத்தப்பட்ட பிறகு விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது. காங்கயம் சாலை, முத்தூர் சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக கொடுமுடி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
இந்த விழாவில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் நாராயணசாமி, திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
விழா ஏற்பாடுகளை இந்து முன்னணி வட்டார நிர்வாகிகள் சுரேஷ்குமார், செல்வகுமார், கோபிநாத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தாராபுரத்தில்: விசுவ ஹிந்து பரிஷத், ஹிந்து ஆன்மிக சங்கமம், கிராம கோயில் பூசாரிகள் பேரவை, பூ கட்டுவோர் பேரவை, அருள்வாக்கு சொல்வோர் பேரவை சார்பில்  7ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா விசர்ஜன ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் நகர, ஒன்றியப் பகுதிகளில் 12 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த இரு நாள்களாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசர்ஜன ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகளை வைத்து உடுமலை சாலை ரவுண்டானாவுக்கு எடுத்து வந்தனர். விசுவ ஹிந்து பரிஷத் நகர ஒருங்கிணைப்பாளர் குமரவேல் தலைமையில் விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டு, உடுமலை சாலை, பள்ளிபாளையம் சாலை, மணியம்மை நகர், அண்ணா நகர் வழியாக என்ஜிஓ காலனி, சங்கரன் கோயில் தெரு, ஐந்து சாலை சந்திப்பு வழியாக அமராவதி ஆற்றை அடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் விநாயகர் சதுர்த்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொறுப்பாளர் ஸ்ரீராம் தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்து கரைக்கப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமரவேல் தலைமையில் தாராபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயராமன், காவல் ஆய்வாளர் கோபிநாத் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
உடுமலையில்: உடுமலையின் மேற்கு பகுதியில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு கிராமங்களில் 27 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்தச் சிலைகள் எரிசினம்பட்டி கிராமத்தில் இருந்து உடுமலை வழியாக வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. பின்னர் பழனி சாலை வழியாக சென்று மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் அனைத்து சிலைகளும் ஆற்றில் கரைக்கப்பட்டன.
இந்து மக்கள் கட்சி சார்பில் குடிமங்கலம் வட்டத்தில் மொத்தம் 29 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அனைத்து சிலைகளும் செவ்வாய்க்கிழமை மாலை உடுமலை நகரில் உள்ள குட்டைத் திடலுக்கு வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. பின்னர் அவை ஊர்வலமாக தளி சாலை, பழனி சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டு அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒட்டி உடுமலையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT