திருப்பூர்

இந்திய விண்வெளித் துறையின் சாதனைகள் குறித்து மாணவர்களுக்கு செப்டம்பர் 8இல் திறனறிப் போட்டி

4th Sep 2019 07:59 AM

ADVERTISEMENT

இந்திய விண்வெளித் துறையின் சாதனைகளை கொண்டாடும் விதமாக உடுமலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு தலைப்புகளில் திறனறிப் போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.8) நடைபெற உள்ளது.
இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாயின் 100ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாகவும், சந்திராயன் -2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி வெற்றி கண்டுள்ளதை முன்னிட்டும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் விழா நடைபெற உள்ளது. உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் உடுமலை, எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் இந்த விழா வரும் செப். 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. விண்வெளித் துறையின் முக்கியத்துவம் குறித்தும், இந்திய அறிவியல் வளர்ச்சியில் இஸ்ரோவின் பணிகள் குறித்தும் இதில் எடுத்துரைக்கப்பட உள்ளது. மேலும் விண்வெளித் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இதில் சந்திராயன்-2 திட்டம் வெற்றி பெற்றதற்காக இஸ்ரோவுக்கு மாணவர்களும் பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளை கையெழுத்து பலகையில் எழுதலாம். அந்த வாழ்த்துப் பலகையானது இஸ்ரோ நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். 
 இந்த விழாவில் 3 - 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு "நீ விரும்பும் இந்திய விஞ்ஞானி' என்ற தலைப்பிலும், 6 - 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு "இன்றைய விண்வெளி சாதனைகளும் இந்திய பெண் விஞ்ஞானிகளின் பங்கும்' என்ற தலைப்பிலும், 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "விக்ரம் சாராபாயின் வியத்தகு சாதனைகள்' என்ற தலைப்பிலும், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "உனது பார்வையில் சந்திரயான்' என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு "20 ஆம் நூற்றாண்டில் இஸ்ரோவின் வளர்ச்சி' என்ற தலைப்பிலும் பேச்சு போட்டிகள் நடைபெறும். 
 இது தவிர 3 - 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் "இந்திய ஏவுகணைகள்' என்ற தலைப்பிலும், 6-8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் "விண்ணில் வலம் வரும் விண்கலம்' என்ற தலைப்பிலும், 9 -10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "வியக்கும் விண்வெளி' என்ற தலைப்பிலும், 11-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "விண்வெளியின் தந்தை விக்ரம் சாராபாய்' என்ற தலைப்பிலும் ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளன.
 போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்களில்  தொடர்புகொண்டு தங்களது பெயர்களை பதிவுசெய்து கொள்ளலாம்.
 கண்ணபிரான், ஒருங்கிணைப்பாளர், கலிலியோ அறிவியல் கழகம், செல்லிடப்பேசி எண்கள்: 8778201926, 9942467764, 9994341973 மின்னஞ்சல்: ka‌n‌n​a‌t‌n‌s‌f‌u‌d‌t@‌g‌m​a‌i‌l.​c‌o‌m.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT