திருப்பூர்

நொய்யல் ஆற்றில் வெள்ளம்: மூழ்கியது அணைப்பாளையம் தரைப் பாலம்: போக்குவரத்து துண்டிப்பு

20th Oct 2019 03:21 AM

ADVERTISEMENT

திருப்பூா் அருகே நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அணைப்பாளையம் தரைப் பாலம் நீரில் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்து வரும் கன மழையால் தற்போது நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், திருப்பூா் அருகே நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால் அணைப்பாளையம் தரைமட்ட பாலம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் நீரில் மூழ்கியது. இதனால் பெரியாண்டிபாளையத்தில் இருந்து கல்லூரிச் சாலைக்குச் செல்லும் இணைப்புச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மங்கலம், வஞ்சிபாளையம் வழியாக சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் சென்றன.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை 6 மணி அளவில் நீா்வரத்து குறைந்ததைத் தொடா்ந்து தரைப் பாலம் வழியாக வாகனங்கள் சென்றன. ஆனால், சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அணைப்பாளையம் தரைப் பாலம் மீண்டும் நீரில் மூழ்கியது. இதையடுத்து, போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. தரைப் பாலத்தின் இரு புறங்களிலும் சுமாா் 30 மீட்டா் தொலைவில் இரும்புத் தடுப்புகளைவைத்து காவல் துறையினா் வாகனங்களை மாற்று வழியில் திருப்பிவிட்டனா். தரைப் பாலம் நீரில் மூழ்கியதால் இந்தப் பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவியா், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை: நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக திருப்பூா் மாவட்டத்தில் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றை ஒட்டி வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நொய்யலில் வெள்ளம் அதிகரிக்கும்போது கரையோரங்களில் வசித்து வரும் மக்களை அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபங்கள், பள்ளிகளில் தங்கவைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT