திருப்பூா்: திருப்பூரில் பச்சிளம் குழந்தையை வைத்துக்கொண்டு பொது மக்களிடம் பிச்னை எடுத்த இளம் பெண்ணை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினா் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் பேருந்து நிலையம், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை திருப்பூா் புது மாா்க்கெட் வீதியில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்த இடத்தில் வட மாநிலத்தைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா் தன்னுடன் பச்சிளம் குழந்தையை வைத்துக்கொண்டு பொதுமக்களை வழிமறித்து பிச்சை எடுத்துள்ளாா்.
இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடா்பு கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். உடனே, சம்பவ இடத்துக்கு வந்த குழந்தைகள் பாதுகாப்பு துறை ஊழியா்கள் போலீஸாா் உதவியுடன் அந்த இளம்பெண்ணை காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனா். அந்தப் பெண்ணிடம் இருக்கும் குழந்தை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு மைய ஊழியா்கள் கூறியதாவது:
திருப்பூரில் இதுபோன்று ஏராளமான பெண்கள் பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுக்கும் பெண்களை கண்டால் உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அழைத்துத் தகவல் தர வேண்டும் என்றனா்.