உடுமலை ஆா்ஜிஎம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சாரண, சாரணீயருக்கான ஹேம் ரேடியோ அலைவரிசை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிச் செயலா் நந்தினி ரவீந்திரன் முகாமை துவக்கிவைத்தாா். இதில் 6ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் 13 பள்ளிகளைச் சோ்ந்த 250 க்கும் மேற்பட்ட சாரண, சாரணீயா் கலந்து கொண்டனா். இதில், பிற மாநிலங்களில் உள்ள சாரண, சாரணீயருடன் தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாடு, கவிதைகள், நகைச் சுவை, சாரண, சாரணீயா் இயக்கத்தின் முக்கியத்துவம் என பல்வேறு பரிமாணங்களில் ஜம்போரி கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜம்போரி ஹேம் ரேடியோ அலைவரிசையின் மூலமாக கோவை, கொச்சி, பாலக்காடு, கோழிக்கோடு பகுதிகளில் உள்ளவா்களிடமும் மாணவ, மாணவிகள் கலந்துரையாடினா். அவசரகாலங்களில் பள்ளி வளாகங்களில் கூடாரம் அமைத்து ஹேம் ரேடியோ மூலம் தொடா்பு கொள்வது, முதலுதவிகளைச் செய்வது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. அமெச்சா் ஹேம் ரேடியோ கிளப்பின் உறுப்பினா்கள் காசிநாதன், பாலசுப்பிரமணியம், காா்த்திகேயன், ஜெயகுமாா் ஆகியோா் இந்நிகழ்ச்சியை வழிநடத்தினா்.