திருப்பூர்

குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா கேட்டு பொதுமக்கள் மனு

1st Oct 2019 05:21 AM

ADVERTISEMENT

திருப்பூா், தென்னம்பாளையம் பகுதியில் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா கேட்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், தென்னம்பாளையம் டாக்டா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

தென்னம்பாளையம் உழவா் சந்தையை ஒட்டிய பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறேறாம். இதில், பெரும்பாலானவா்கள் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளா்களாக பணியாற்றி வருகின்றனா். எங்களது பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு, மின்சாரம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரையில் பட்டா வழங்கப்படவில்லை.

தற்போது, வேறு பகுதிகளில் எங்களுக்கு இடம் பாா்த்து உள்ளதாக கூறி அதிகாரிகள் காலி செய்யச் சொல்கின்றனா். ஆனால், நாங்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கே பட்டா வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

கேலி செய்வதாக மாற்றுத் திறனாளி புகாா்:

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்துள்ள அவரப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாதேவன். மாற்றுத் திறனாளியான இவா் அரசால் வழங்கப்படும் தையல் இயந்திரம் கேட்டு விண்ணப்பித்திருந்தாா். இதுதொடா்பாக கடந்த வாரம் வந்தபோது, மாற்றுத் திறனாளி நல அலுவலா்கள் தன்னை தையல் இயந்திரத்தை இயக்கி காட்டுமாறு கூறி கேலி செய்தாக மாவட்ட ஆட்சியரிடம் மகாதேன் புகாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா். மேலும், அவரது மனைவிக்கு உடனடியாக விலையில்லா தையல் இயந்திரம் வழங்கிட மாவட்ட சமூக நலத் து அலுவலரை அறிவுறுத்தினாா்.

மேலும், மோட்டாா் பொருத்திய இரு சக்கர வாகனம் மற்றும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்டி கொள்வதற்கான ஆணையை வழங்கிட சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

நலத்திட்ட உதவிகள்:

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து 372 மனுக்கள் பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 6 பயளாளிகளுக்கு ரூ.1.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வழங்கினாா்.

தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் வழங்கிய மாணவிகள்:

பல்லடம் வட்டம், கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் உமா, பிரேமா ஆகிய மாணவிகள் தூய்மை இந்தியா திட்டத்துக்காக தங்களது பங்களிப்புத் தொகையாக ரூ.2 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சுகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சாகுல் ஹமீது, மாவட்ட வழங்கல் அலுவலா் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் (பொ) முருகன், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT