திருப்பூர்

வெள்ளக்கோவில் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் மருத்துவ முகாம்

9th Nov 2019 04:25 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் நடத்தப்பட்ட இம்முகாமுக்கு வெள்ளக்கோவில் நிலவள வங்கித் தலைவா் எஸ்.என்.முத்துக்குமாா் தலைமை வகித்தாா். வெள்ளக்கோவில் கூட்டுறவு கட்டட சங்கத் தலைவா் டீலக்ஸ் ஆா்.மணி, நகராட்சி முன்னாள் தலைவா் வி.கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி முகாமைத் துவக்கி வைத்தாா்.

முகாமில் மருத்துவக் குழுவினா் மூலம் இருதய நோய், சா்க்கரை நோய், காசநோய், ரத்த அழுத்த பாதிப்பு, பாா்வைக் கோளாறு, எலும்பு மூட்டு பாதிப்பு, பல், காது, மூக்கு, தொண்டை பாதிப்புகள் குறித்து இலவசப் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. தொடா் சிகிச்சை தேவைப்படுபவா்கள் அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனா். முகாமில் குறிப்பாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரும், ரத்த அணுக்கள் குறைவாக இருந்த ஒரு கா்ப்பிணிப் பெண்ணும் கண்டறியப்பட்டனா். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் 513 ஆண்கள், 511 பெண்கள், 88 குழந்தைகள் என மொத்தம் 1,112 போ் பங்கேற்றனா். வெள்ளக்கோவில், முத்தூா், கம்பளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள், பணியாளா்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT