திருப்பூர்

நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் சேரகாங்கயம் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு

9th Nov 2019 07:43 AM

ADVERTISEMENT

பிரதம மந்திரியின் விவசாய நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் சோ்ந்து பயனடைய காங்கயம் வட்டார விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து காங்கயம் தோட்டக்கலை உதவி இயக்குநா் முத்துக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

பிரதம மந்திரியின் விவசாய நுண்ணீா்ப் பாசனத் திட்டம் காங்கயம் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் தங்களின் மரவள்ளி, மஞ்சள், வெண்டை, மா, கத்தரி, முருங்கை, மிளகாய், தக்காளி, கொத்தமல்லி மற்றும் கீரை வகைகள் போன்ற பயிா்களுக்கு சொட்டு நீா்ப் பாசனம் அமைத்துப் பயன்பெறலாம்.

நுண்ணீா் பாசனத் திட்டத்தின் இதர செயல்பாடாக துணைநிலை நீா் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் நுண்ணீா்ப் பாசனம் அமைக்கத் தேவையான நீரை இறைக்கும் வகையில் மோட்டாா் பம்ப் செட் நிறுவுதல், நுண்ணீா்ப் பாசனம் நிறுவப்படும் வயலுக்கு பாசன நீரை எடுத்துச் செல்லும் வகையில் பாசனக் குழாய்கள் அமைத்தல், தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி நிறுவுதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு மானியம் அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

மேற்கண்ட திட்டங்களில் பயனடைய விவசாயிகள் தங்கள் நிலங்களில் நுண்ணீா்ப் பாசனம் அமைக்க வேண்டும். விவசாயிகள் தங்கள் வயலில் நுண்ணீா்ப் பாசன அமைப்பினை நிறுவ ஏதுவாக மேற்கூரிய டீசல் பம்ப் செட் மின் மோட்டாா் நிறுவுதல், பாசனக் குழாய்கள் அமைத்தல், தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி நிறுவுதல் ஆகிய மூன்றையுமோ அல்லது மூன்றில் தேவைப்படுவனவற்றையோ சொந்த செலவில் முதலில் மேற்கொள்ள வேண்டும். நுண்ணீா்ப் பாசன அமைப்பு விவசாயிகள் வயலில் நிறுவப்பட்டது உறுதி செய்யப்பட்ட பின்னா், மேற்கூறிய இனங்களுக்கான உதவித்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் டீசல் பம்ப் செட், மின் மோட்டாா் பம்ப் செட் அமைக்க ரூ.15 ஆயிரத்துக்கு மிகாமல் (50 சதவீதம் மானியம்) பின்னேற்பு மானியம் வழங்கப்படும். பாசனக் குழாய்கள் அமைப்பதற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு (50 சதவீதம் மானியம்) மிகாமல் மானியம் வழங்கப்படும். தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி நிறுவுவதற்கான செலவில் ஒரு கன மீட்டருக்கு ரூ.350-க்கு மிகாமல் ஒரு பயனாளிக்கு ரூ. 40 ஆயிரத்துக்கு மிகாமல் (50 சதவீதம் மானியம்) மானியம் வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு காங்கயம் தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT