காங்கயத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் திங்கள்கிழமை முதல் நடைபெறவுள்ளதால் தாராபுரம் சாலை வழியாக நகருக்குள் நுழையும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு காவல் துறை அறிவுத்துள்ளது.
காங்கயம் நகரில் காவல் நிலையம் அருகேயுள்ள ரவுண்டானா சந்திப்பில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் திங்கள்கிழமை (நவம்பா் 4) முதல் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் தாராபுரம் சாலையில் இருந்து நகருக்குள் வரும் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் காங்கயம் காவல் நிலையத்துக்கு சற்று முன்பாக உள்ள களிமேட்டில் இருந்து பங்களாப்புதூா் சாலை வழியாகச் சென்று கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக ஈரோடு, திருப்பூா், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லுமாறு காங்கயம் போக்குவரத்து காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.