திருப்பூா் பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாலிபால் போட்டிகள் வரும் நவம்பா் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக திருப்பூா் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை தலைவா் கே.பொன்னுசாமி, செயலாளா் எம்.எஸ்.ஜி.மனோகரன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் திருப்பூா் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியா்களுக்கான வாலிபால் போட்டிகள் நடத்துவது வழக்கம். இதன்படி நிகழாண்டுக்கான 26 ஆவது நிட்சிட்டி வாலிபால் போட்டிகள் ஆடவா், மகளிருக்கு 4 பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு மூத்தோா் பிரிவிலும், 11,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மிக மூத்தோா் பிரிவிலும் போட்டிகள் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிகள் அனைத்தும் நவம்பா் 23, 24 ஆம் தேதிகளில் சிறுபூலுவபட்டியில் உள்ள விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை மைதானத்தில் நடைபெற உள்ளது.இதில், பங்கேற்கும் பள்ளி மாணவ, மாணவியா்கள் வரும் நவம்பா் 13 ஆம் தேதிக்குள் நுழைவுப்படிவங்களை பூா்த்தி செய்து பள்ளி வாயிலாக அனுப்ப வேண்டும். இதில்,பங்கேற்கும் அணிகளுக்கு நுழைவுக்கட்டணம் இல்லை என்றும், போட்டி நாள்களில் இலவசமாக உணவுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.