வெள்ளக்கோவில் அருகே 3 இடங்களில் தீ விபத்து

வெள்ளக்கோவில் அருகே மூன்று இடங்களில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.  முத்தூர், தொட்டியபாளையம்

வெள்ளக்கோவில் அருகே மூன்று இடங்களில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.  முத்தூர், தொட்டியபாளையம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் வேலுசாமி (37), லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி பரமேஸ்வரி (30). இவர்களுடைய மகன் கோகுல் (8), தொட்டியபாளையம் அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். 
கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் கோகுல் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். வீட்டின் மேற்கூரை சிமென்ட் சீட்டால் வேயப்பட்டுள்ளது. தரைப்பகுதியைச் சுற்றிலும் தென்னங் கீற்றுகளால் மறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வீட்டின் ஒரு பகுதியில் திடீரெனத் தீப்பிடித்து புகை மூட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கோகுல் வெளியே வந்துள்ளார். 
அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) வேலுசாமி தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். தீ பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. இந்த விபத்தில் வீடு, தொலைக்காட்சிப் பெட்டி, வீட்டுச் சாமான்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, துணிகள் எரிந்து சேதமடைந்தன. 
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட வெள்ளக்கோவில் வருவாய் ஆய்வாளர் சாந்தி, சின்னமுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பிரபாவதி ஆகியோர், அரசின் இயற்கைப் பேரிடர் நிவாரண உதவித் திட்டம் மூலம் உணவுப் பொருள்கள், ரூ.5,000 ஆகியவற்றை உடனடியாக வழங்கினர்.  
இதேபோல முத்தூர், வேலம்பாளையம் சாமிநாதபுரம் காலனிப் பகுதியில் பனத்தோப்பில் தீப்பிடித்தது. சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 10 பனை மரங்கள் எரிந்து சேதமடைந்தன. வேலம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
வெள்ளக்கோவில் அருகே செம்மாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் கே.சரவணன் (42). உத்தமபாளையம் கிராமம் செங்காளிபாளையத்தில் இவருக்குச் சொந்தமான நூற்பாலை உள்ளது. இதன் புளோ ரூம் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. அங்கிருந்த பஞ்சுகளில் தீ மளமளவெனப் பரவியது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். சேத மதிப்பு குறித்து உடனடியாகத் தகவல் கிடைக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com